Category Archives: தமிழ்

வெற்றியின் ரகசியம்

( translated from . . .Thanks to Sunder for sharing this.)
நான் புதிய பயணம் புறப்பட்ட போதெல்லாம்
பயமென்னும் பேய் ஒரு பொய்யை சொன்னது.
” தோல்வி நிச்சயம். காயப் படுவாய், வலியால் துடிப்பாய்.”
வழி நெடுக, திரும்ப திரும்ப அச்சுறுத்தியது,
” உனக்கு வயதாகி விட்டது. பலவீனமாய் இருக்கிறாய். திரும்பிப் போ.”
குழம்பினேன், தடுமாறி விழுந்தேன். ஆனாலும் பயணித்தேன்.
கடினமான பாதை தான்.
ஆனால் மற்றவர் சொன்னது போலாகவில்லை .
நான் தோற்கவில்லை.
என்ன, குழம்பி இருக்காவிட்டால், கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் பயணித்திருப்பேன்.
வெற்றியின் ரகசியம் இது தான்:
பயத்தின் குரலை கண்டு கொள்ளுங்கள்,
அதன் பேச்சை ஒரு காதில் வாங்கி மறு காதில் உடனே வெளியேற்றுங்கள்.

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர். . .

( translated from the article http://thekambattu.wordpress.com/2013/10/09/how-early-we-corrupt-our-children/)
கோவிந்தராஜின் பத்து வயது மகன் ஸாம், இந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து, இங்கிருந்து 40 கிமீ தொலைவிலுள்ள சேராப்பட்டு என்னும் ஊரில், ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கிறான். கோவிந்தராஜ் ஒரு கிறித்தவர்; அதனால் அந்தப் பள்ளியில் ஸாமுக்கு படிப்பு, துணிமணி, புத்தகங்கள், உணவு எல்லாம் இலவசம். ( இதே பாணியில் செயல்படும் இந்து பள்ளிகளும் ஏராளம். இங்குள்ள மலைவாசிகளெல்லாம் இந்து மதமென்று மூளை சலவை செய்யப்பட்டு வெகு நாளாகிறது.)

சமீபத்தில் ஒரு நாள் கோவிந்தராஜ் எங்கள் வீட்டிற்கு வந்த போது சோணாட்டியிடம் சொன்ன கதை இது:
புதிய மாணவர்கள் தங்களை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். இந்த கட்டுரைகள், நன்கொடை அளிக்கும் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நமது ஸாம் ( ஜாதி சான்றிதழ் தேவைப்படும் பொது பெயர் ஷ்யாம் என்று மாறும்! ஏனென்றால், இங்குள்ள கிராம அதிகாரிகள் கிறித்தவ பெயர் கொண்டவர்கள் ஆதிவாசிகள் இல்லை என்று அவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள்! இது ஒரு தனி கதை!) தன்னுடைய கட்டுரையில் தன் குடும்பத்தைப் பற்றியும், குடும்பத்தின் நெல் மற்றும் கரும்பு வயல்களைப் பற்றியும் எழுதினான். நியாய விலை கடையில் கொடுக்கும் அரிசியை சாப்பிடாமல் தாங்கள் விளைவித்த அரிசியையே சாப்பிடுவதாக பெருமையுடன் எழுதினான்; தங்களிடமுள்ள ஆடுகள், கோழிகள், மாடுகள் பற்றி எழுதினான். அவனுடைய அப்பாவின் பைக் பற்றியும், இரண்டு மொபைல் போன் பற்றியும் குறிப்பிட்டான் ; தன்னுடைய வீடு ஓலை குடிசை கிடையாது, ஓட்டு வீடு என்று பெருமிதப் பட்டான். நிலத்திலிருந்து வரும் வருட வருமானம் இரண்டு லட்சம் ரூபாய் என்றும் எழுதினான். ஆக மொத்தம் ஒரு நல்ல வழக்கை என்பதை படம் பிடித்துக் காட்டியிருந்தான்.
பள்ளிகூட நிர்வாகிகள் கோவிந்தராஜை கூப்பிட்டு, இந்த கட்டுரையை அப்படியே அனுப்பினால் உதவி தொகை கிடைக்காது என்றும் முழு கட்டணத்தையும் ( ஆண்டுக்கு சுமார் அறுபது ஆயிரம் ரூபாய்) கட்டுமாறும் கூறினர். இவ்வளவு பெரிய தொகையை கட்ட இயலாத கோவிந்தராஜ், அங்கிருந்த பாதிரியாரிடம் செல்ல, அவர் இவருக்கு சிபாரிசு செய்ய, பள்ளிக்கூடம் ஒத்துக் கொண்டது ஒரு நிபந்தனையோடு ; கட்டுரையை மாற்றி எழுத வேண்டும்!
ஸாம் மாற்றி எழுதிய கட்டுரையின் சாராம்சம் :
கடையில் விலை கொடுத்து வாங்க முடியாமல் தங்கள் சொந்த அரிசியை சாப்பிடுகிறார்கள்; இரண்டே இரண்டு மாடுகள், வெறும் மூன்று ஆடுகள், மிகச் சில கோழிகள் உள்ளன ; கான்க்ரீட் வீடு கட்ட முடியாமல் ஓட்டு வீட்டில் வசிக்கிறார்கள்; நிலத்திலிருந்து வரும் வருமானம், செய்கூலி, டிராக்டர் கூலி, எல்லாம் கொடுத்தது போக மாதம் 6000 ரூபாய் தான். இதில் அவர் மற்ற இரண்டு பையன்களையும் படிக்க வைக்க வேண்டும்.பைக்கும் போனும் இந்த கட்டுரையில் குறிப்பிடப் படவில்லை.

இரண்டு கட்டுரைகளுமே உண்மையைத் தான் காட்டுகின்றன; ஆனால் இரண்டாம் முறை எழுதும் போது, அந்த சின்ன பையனின் மனம் எப்படி சிறுமைப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். எனக்கு நெஞ்சு அடைக்கிறது.

நான்கு வயது குழந்தைக்கு என்ன தெரிய வேண்டும்?

( Based on an article from this blog: http://magicalchildhood.wordpress.com/2010/08/31/what-should-a-4-year-old-know/ Thanks to Anu, Krishna and Jaisankar for the feedback )

நாலு வயசாச்சு, ஒண்ணுமே தெரியல இவளுக்கு! அலுத்துக் கொண்டார் அந்த தாய். நாலு வயசு குழந்தைக்கு என்ன என்ன தெரிந்திருக்க வேண்டும் என்ற அவரது கேள்விக்கு கிடைக்கும் பெரும்பான்மை பதில்கள் எனக்கு கவலையையும் எரிச்சலையும் தருகின்றன.
ஒரு தாய் மிகப் பெருமையாக கொடுத்த பட்டியலில், நூறு எண்ணத் தெரியும், பெயர் எழுதத் தெரியும், ஒன்பது கோள்களின் பெயர்கள் என்று அடுக்கிக் கொண்டே போனார். இன்னும் சில தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு பல விஷயங்கள் மூன்று வயதிலிரிந்தே தெரியுமென்று வெறுப்பேற்றினார்கள். சொற்பமான சில பேர் ஒவ்வொரு குழந்தையும் அதனது வேகத்தில் கற்றுக் கொள்ளும், கவலைப்படத் தேவையில்லை என்றார்கள்.

ஏற்கனவே நொந்து போய் கேள்வி கேட்ட அந்த தாய், மற்ற குழந்தைகளுக்கு இவ்வளவு தெரியுமா என்று இன்னும் அதிகமாக கவலைப்பட ஆரம்பித்துவிட்டார். பெற்ற பிள்ளைகளையே வெறும் பரிசுப் பொருளாக மதிக்கும் “போட்டிக் கலாசாரம்” நமது சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்டது. இவர்கள் குழந்தைகளா இல்லை பந்தயக் குதிரைகளா?

என்னுடைய கருத்தில், ஒரு நாலு வயது குழந்தைக்கு தெரிய வேண்டியது:
1. தான் முழுக்க முழுக்க நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வு.
2. பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு. பொது இடங்களில் பாதுகாப்புடன் இருக்கும் அறிவு, தன் சுதந்திரம் மற்றும் அதை எப்போதும் தன் குடும்பத்தினர் காப்பார்கள் என்ற நம்பிக்கை.

3. மனம்விட்டு சிரிக்க, உற்சாகமாக இருக்க , பயமில்லாமல் தனது கற்பனையை வெளிப்படுத்த ; முயலுக்கு மூனு கால் போட்டாலும், ஆகாயத்திற்கு பச்சை சாயமடித்தாலும் திட்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கை.

4. தன்னுடைய ஈடுபாடு எதில் என்பதை அறிதல்; அதில் கவனம் செலுத்த பெற்றோரின் உற்சாகமான ஆதரவு. கணக்கு போட மறுத்தால் கவலைப்படாதீர்கள், அவளாகவே ஒரு நாள் எண்களைப் பற்றி கேட்க ஆரம்பிப்பாள். இப்போது அவள் ராக்கெட் விடட்டும், மணலில் விளையாடட்டும், ஓவியம் போடட்டும், மகிழ்ச்சியாக இருக்கட்டும்!

5. உலகமும் அவளும் ஆச்சரியமானவை என்று உணரட்டும். அவனுக்குத் தெரியட்டும் தான் மிக அருமையானவன் என்று, களங்கமில்லா அறிவுடையவன் என்று, கற்பனை வளமிக்க படைப்பாளி என்று. பாடம் படிப்பதைப் போல், வெளியில் சென்று விளையாடுவதும் முக்கியமானது தான் என்று பழகட்டும்.

பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
1. ஒவ்வொரு குழந்தையும் அதனதன் வேகத்தில் நடக்க, பேச, படிக்க, கணக்கு போட நன்றாகவே கற்றுக் கொள்ளும். எப்போது ஆரம்பிக்கிறது என்பதற்கும் எவ்வளவு நன்றாக செய்கிறது என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் ஒரு இன்றியமையாத செயல் பெற்றோர் கையில் தான் இருக்கிறது – சின்னஞ் சிறு வயதில் பள்ளியில் கொண்டு தள்ளுவது அல்ல, விலை உயர்ந்த புத்தகமோ, பொம்மையோ அல்ல. ஆனால் அம்மாவோ அப்பாவோ (இருவரும் என்றால் உத்தமம்) குழந்தையோடு தினமும் உட்கார்ந்து ஏதாவது ஒரு புத்தகம் வாசிப்பது அந்த குழந்தையை ஒரு நல்ல அறிவாளியாக பண்பாளராக உருவாக்கும்.
3. வகுப்பிலே முதலிடம், எந்தப் போட்டியிலும் வெற்றி, எல்லாத் துறைகளிலும் வெற்றி என்று எல்லா நேரமும் நெருக்கப்படும் குழந்தைகள், தங்கள் இனிமையான, மீண்டும் பெற முடியாத குழந்தைப் பருவத்தையே இழக்கிறார்கள். மகிழ்ச்சிகரமான, கவலையற்ற குழந்தைப் பருவத்தை கெடுக்காதீர்கள்.
4, நல்ல புத்தகங்கள், சித்திரக் கலை சாதனங்கள், இசைக் கருவிகள் வாங்கிக் கொடுங்கள். இயற்கையான சூழல் ஏற்படுத்திக் கொடுத்து இவற்றை எந்த தடையுமில்லாமல் பயன்படுத்தும் உரிமையும் கொடுங்கள். வீட்டுக்கு வெளியே மண்ணிலும் சேற்றிலும் விளையாட அனுமதியுங்கள்.
5. நமது குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் வேண்டாம், பள்ளி முடிந்தவுடன் நேராக ட்யூஷன் வேண்டாம், பரத நாட்டியம் தேவையில்லை, கிரிக்கெட் கோச்சிங் வேண்டாம்; அவர்களுக்கு நாம், பெற்றோர், கூட இருக்க வேண்டும். அருகில் உட்கார்ந்து தோழமை பேசும் தந்தை வேண்டும்; படம் வரையும் போது , கப்பல் செய்யும் போது அம்மா அருகில் இருக்க வேண்டும்; கும்மாளம் போடும் குட்டிகளாய் பெற்றோர் மாற வேண்டும்; மாலைப் பொழுதில் எல்லோரும் அந்தப் பிஞ்சுக் கால்கள் நடக்கும் வேகத்தில் நடக்கலாம்; இரண்டு பங்கு நேரமானாலும், குழந்தையோடு சேர்ந்து சமையல் செய்யலாம்; அவர்கள் தான் நமது வாழ்வின் ஒளி விளக்கு என்பதை வெளிப்படுத்தலாம்.

சொந்த அனுபவம்

எங்களுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவனுக்கு 15ம் சிறியவனுக்கு 10 வயதும் ஆகிறது. பெரியவன் எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளிக்குப் போகிறான். இளையவனும் நாங்களும் வீட்டிலேயே வாழ்க்கை பழகி வருகிறோம். மூத்தவன் நாலு வயதில் படிக்கவும், ஐந்து வயதில் எழுதவும் ஆரம்பித்தான். இளையவன் ஆறு வயதில் படிக்கவும் ஏழு வயதில் எழுதவும் ஆரம்பித்தான். மெதுவாக ஆரம்பித்தாலும் ஓரிரு மாதத்தில் முழுவதுமாக கற்றுக் கொண்டுவிட்டான். பெரியவனுக்கு மண்ணைக் கண்டாலே பிடிக்காது – அசுத்தமென்று நினைப்பான். சிறியவனோ விழித்திருக்கும் பாதி நேரம் மண்ணிலேயே தான் இருப்பான். இருவருக்குமே நாலு வயதில் சித்திரம் வரைய மிகவும் பிரியம். ஏதாவது கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள். புதியதாக ஏதாவது கற்க வேண்டிய போது , நாங்களும் குழந்தைகளோடு சேர்ந்து கற்கிறோம்.
நாங்கள் எதையெல்லாம் செய்ததில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். விருந்தாளிகளிடம் ABC சொல்லிக் காட்டு, பாட்டுப் பாடு , நடனம் ஆடு என்று சொன்னதில்லை. மற்றவனைக் காட்டிலும் கெட்டிக்காரனாய் இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதில்லை; வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி வைக்கவில்லை; தின்பண்டங்களை, பொம்மைகளை லஞ்சமாக வாங்கிக் கொடுத்ததில்லை.

கேள்விக் கணைகள்
சமீபத்தில் ஒரு நண்பர் தயங்கித் தயங்கி கேட்டார், ” பையனுக்கு நாலு வயசாச்சு, கையெழுத்துப் பயிற்சின்னாலே ஓடுறான். புத்தகம் படிக்க மாட்டேங்கிறான். என்ன செய்யறதுன்னு தெரியல.” இன்னொரு நண்பர் சொன்னார், ” இடது கையில தான் எழுதுவேன்னு அடம் பிடிக்கிறான். கையிலேயே அடிச்சுப் பாத்துட்டேன், மாற மாட்டேங்கிறான் “. எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நான் அவர்களுக்குச் சொன்னேன், ” அந்தப் பிஞ்சு விரல்கள் எழுதுவதற்காக படைக்கப் படவில்லை. மண்ணில் விளையாட, பொருட்களை தொட்டு உணர்ந்து கொள்ள, சித்திரம் வரைய (உடனே மதன் / கோபு அளவிற்கு போய்விடாதீர்கள்!) ஏற்றவை. எழுதச் சொல்லி அவற்றை உடைத்து விடாதீர்கள். இடது கைப் பழக்கம் உள்ளவர்க்கு வலது மூளை வலுவாக வேலை செய்கிறது – நல்ல படைப்பாற்றல் பெற்றிருப்பார்கள். கட்டாயப்படுத்தி இந்த அரிய படைப்புத்திறனை அழித்து விடாதீர்கள். குழந்தை படிக்க வேண்டுமென்றால் நீங்களும் கூட உட்கார்ந்து கொண்டு தினமும் படியுங்கள்.”

அடுத்த முறை குழந்தையை அடிக்க குச்சியை எடுக்குமுன் இவற்றை எல்லாம் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

சிற்பக் கலை

பச்சை மாறும் மஞ்சள் விரியும்
பைங்கிளி மைனா குருவியும் காக்கையும்
இச்சை மிகுதியில் நோட்டம் கொடுத்து
அருஞ்சுவை கனியை கொத்திப் பார்க்கும்.
கனி விழாவண்ணம் காம்பை விடுத்து
அடிமுனை தின்று சிற்பம் வடிக்கும்.

சொல்லும் பொருளும்

சத்தத்தின் நடுவில்
மௌனத்தை தேடினேன்.
கிடைத்தது கானல் நீர்.

தூங்க வழியில்லை.
விழிக்க முடியவில்லை
கனவுகளின் பாரம்.

உதிர்ந்த இலைகளில்
நடக்கும் பாதங்கள்
ஒளியப் பார்த்த கதை.

பெயரில்லாதவன்

அன்றாடம் வயக்காட்டில் அல்லோலப்பட்டு
மன்றாடிப் பெற்ற கூலி கையில் பறக்க
தின்று குடித்தழித்து, தினவெடுத்து திமிருடன்
நம்பி வந்த பெண்ணை உதைத்து வதைத்து,
களைத்து படுத்துறங்கி, ஐயோ வென எழுந்து
மீண்டும் முதல் வரியில் தினம் தொடங்கும்
பெயரில்லாத பல கோடியில் இவனும் ஒருவன்.

ஹைக்கூ??

கொட்டும் மழையில்
குடை பிடித்தது பட்டாம் பூச்சி.
நனையாமல் பூ!

மீண்டும் சில சிதறல்கள்

வாழ்க்கை நாடகத்தில்
துயரக் காட்சியில் மட்டும்
இயக்குபவனை தேடும் நடிகன் நான்.

* * * * * ** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

உதடு பிரிந்து வரும் வார்த்தைகள்
பேருந்தில் கூட பயணிக்கும்
முகமற்ற பயணிகள்.

* * * * * ** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அர்த்தமற்ற பிதற்றல் மீதும்
ஆரவாரமாய் விவாதம் —
அறிவாளிகளின் கூட்டம்.

* * * * * ** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மாயக் குதிரை

மாயக் குதிரை
நொடியில் அடையும் இலக்கை!
அக்கரைப் பச்சை ஆசை காட்ட
இலக்கும் உடனே மாறும்.
மறுபடியும் பயணம்,
மறுபடியும் பச்சை.

கடவுள்

ஒரு இனிய கனவு.
இன்றைய கவலையை நேற்றுடன் சேர்க்கும்;
நாளை நல்லதாய் விடியும்.
கடவுள் ஒரு கனவு.

காயப்பட்ட மனதுக்கு ஆறுதல்;
சக நோயாளிகளின் கூட்டணியில்
சரியாகிவிட்ட பிரமை.
கடவுள் ஒரு அரு மருந்து.