சோம்பேறி கழுதை

அந்த காலத்தில, பஸ் டிரெயின் லாரி இதெல்லாம் இல்லாத அந்த காலத்தில, ஒரு ஊரில ஒரு உப்பு வியாபாரி இருந்தாரு. பக்கத்து பட்டினத்துக்கு போய் உப்பு மூட்டை வாங்கிட்டு வந்து விப்பாரு. உப்பு மூட்டைய தூக்கிட்டு வரதுக்கு அவர் ஒரு கழுதய வளத்துக்கிட்டு இருந்தாரு. ரெண்டு உப்பு மூட்டைகள வாங்கி கழுதை மேல வச்சி கட்டி ஓட்டி விடுவாரு. மத்த வேலையெல்லாம் முடிச்சிக்கிட்டு அவரு சாயங்காலம் வரும்போது கழுதை வீடு வந்து சேர்ந்திருக்கும்.
பட்டினத்திலிருந்து வர்ர வழியில ஒரு சின்ன நதிய கடந்து வரணும். அந்த இடம் வந்த உடனே கொஞ்சம் நின்னு தண்ணி குடிச்சிட்டு இளைப்பாறிட்டு வருவாங்க.
இப்படி தினமும் நல்லாத் தான் போய்க்கிட்டு இருந்துச்சு. அந்த கழுதைக்கு சோம்பேறித்தனம் ஜாஸ்தி ஆகற வரைக்கும். கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன மாதிரின்னு கேட்டிருக்கீங்களா? அப்படித்தான் ஆச்சு. சும்மா நடக்கிறதுக்கே அழும், மூட்டைய வச்சா அவ்ளோ தான். ரொம்ப மெதுவா நடக்கும்.
ஒரு நாள் மூட்டைய தூக்கிட்டு ஆத்தைக் கடக்கும் போது கல் தடுக்கி கால் இடறி ஆத்துக்குள்ள விழுந்திருச்சு கழுதை. மூட்டையிலிருந்த உப்பு தண்ணியில நனஞ்சிருச்சு. உப்பு தண்ணியில விழுந்தா என்ன ஆகும்?. . . .கரைஞ்சு போச்சு! எழுந்திருச்ச கழுதை முதுகில் இருந்த எடை குறைஞ்சி போனத கவனிச்சு ஜாலியா நடந்தது. . .அப்புறமென்ன ஒவ்வொரு நாளும் ஆத்துக்குள்ள தொபுக்கடீர்னு விழும், ஜாலியா நடக்கும். . .
வியாபாரிக்கு ஒன்னும் புரியல. கடையில வாங்கும்போது எடை கரெக்டா இருக்கு. வீட்டுக்கு வந்து அளந்து பாத்தா குறையுது. என்னடா இதுன்னு ரொம்ப குழம்பி போய்டாரு. அவரு நினைச்சாரு யாரோ உப்பை திருடறாங்கன்னு.
சரி. என்ன தான் நடக்குதின்னு பார்ப்போம்னு ஒரு நாள் கழுதை மேல உப்பு மூட்டைகள ஏத்தி விட்டுட்டு பின்னால ஒளிஞ்சு ஒளிஞ்சு வந்தாரு. கழுதை வேக வேகமா நடக்கிறத பாத்து ஆச்சரியப்பட்டாரு. ஆத்துக்கிட்ட வந்த கழுதை யாராவது கவனிக்கிறாங்களான்னு பாத்திச்சு. வியாபாரிய பாக்கல. ஹையான்னு கத்திக்கிட்டு தண்ணிக்குள்ள குதிச்சது! உடம்ப நல்லா ஆட்டிக்கிட்டு உலுக்கிக்கிட்டு எந்திரிச்சி நடந்தது. வியாபாரிக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு. ரொம்ப கோபம் வந்திருச்சு. வா வா உனக்கு சரியான பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்னு கறுவிக்கிட்டாரு.

மறுநாள் உப்புக் கடைக்கு போகாமல் பஞ்சு கடைக்கு போனாரு வியாபாரி. நாலு மூட்டை பஞ்சு வாங்கி கழுதை மேல வச்சுக் கட்டினாரு. கழுதை வழக்கம்போல வேகமா ஓடி தண்ணிக்குள்ள குதிச்சது. உடம்ப நல்லா ஆட்டிக்கிட்டு உலுக்கிக்கிட்டு எந்திரிக்கப் பார்த்தது! ஆனா என்ன ஆச்சு? தண்ணியில நனைஞ்சா பஞ்சு என்ன ஆகும்? ….. தண்ணிய உறிஞ்சிகிச்சு! எடை கூடிப் போச்சு! நடக்க முடியாம தள்ளாடி தள்ளாடி வீடு வந்து சேந்திச்சு.

அதுக்கு அப்புறம் தண்ணின்னாலே நடுங்குதாம் கழுதை!

Please give us your feedback on this post.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s